தனியார் பஸ்கள் 90 வீதமானவை சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் பஸ் கட்டணத்தை அதிகரித்தமை பெரும் அநீதியாகுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மக்கள் பெரும் அசௌகரியங்களை தற்போது எதிர்நோக்கி வருகின்றனர். அதேவேளை ஆகக் குறைந்த கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரித்துள்ளதால் பயணிகள் பெருமளவிலானோர் அந்த தூரத்தை நடந்தே கடப்பதற்கு முனைவர். அதனால் தனியார் போக்குவரத்து பஸ் சேவை நெருக்கடிகளை எதிர்நோக்க நேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் 22 வீதத்தாலும் ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 40 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே, கெமுனு விஜேரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருளுக்கான நெருக்கடி நிலை நிலவுகின்ற போதும் அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக பெரும்பாலான பஸ்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறான தருணத்தில் பஸ் கட்டணத்தை அதிகரித்துள்ளமை அநீதியானதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் சூழ்நிலையின் போது ஆசனங்களில் மாத்திரம் பயணிகள் அனுமதிக்கப்பட்டதோடு பஸ் கட்டண அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த கட்டண அதிகரிப்புகளே தற்போது நடைமுறையிலுள்ளன.
அதேவேளை மிகக் குறைவான பஸ்களே சேவையிலீடுபடுத்தப்பட்டு பயணிகள் பஸ்களின் கூரைகளிலும் பின் பகுதியிலும் தொங்கிக் கொண்டு பிரயாணம் செய்யும் நிலையில் அவர்களிடமிருந்து அதிகரித்த பஸ் கட்டணத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
பஸ் கட்டணத்தை அதிகரிக்கும் தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவது தவறல்ல. எனினும் எரிபொருள் கிடைத்து 75 வீதமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் போது அத்தகைய கட்டண அதிகரிப்பு மேற்கொள்வதே பொருத்தமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks