2022 க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இவ்வருடம் நவம்பர் மாதத்தில் நடாத்த திட்டமிட்டிருந்த போதிலும் அதனை மேலும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இன்றையதினம் (04) இடம்பெற்று வரும் பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, நடைபெற்று முடிந்த 2021 க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி 2021 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த பெறுபேறுகள் வெளியிட்டு குறைந்தது மூன்று மாதங்களுக்குப் பின்னரே அடுத்த பரீட்சைகளை நடாத்த வேண்டும். பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மீண்டும் அதற்கு தயாராவதற்கு இடைவெளி அவசியம்.
அத்துடன், உயர் தரம் கற்பிக்கும் 16 முக்கிய பாடங்களில், விஞ்ஞானம், கலை, வர்த்தகம், தொழில்நுட்பம் சார்ந்த ஆசிரியர்களை 17 பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைத்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூலம் அமர்வுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருவதாகவும், அதனைத் தொடர்ந்து ஓகஸ்ட், செப்டெம்பர், ஒக்டோபர் ஆகிய 3 மாதங்களில் விசேட அமர்வுகளை மாணவர்களுக்கு வழங்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2021 இல் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை இவ்வருடம் பெப்ரவரி 07ஆம் திகதி ஆரம்பமாகியது.
இப்பரீட்சைகள் 2,437 நிலையங்களில் இடம்பெற்றதோடு, 279,141 பாடசாலை பரீட்சார்த்திகளும், 66,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உள்ளிட்ட 345,242 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks