BBC Tamil
Cinema

தமிழ் நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராகவுள்ளார். 

குடியரசு தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் வரிசையில் இவரது நியமனம் வருகிறது.

இளையராஜா மட்டுமின்றி விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோரும் நியமன உறுப்பினர்களாக தேர்வாகின்றனர். இவர்களுக்கான நியமன உத்தரவு விரைவில் குடியரசு தலைவரால் பிறப்பிக்கப்படும்.

இதற்கிடையே, புதிய நியமன உறுப்பினர்களாகவிருக்கும் நால்வருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜாவுக்கான வாழ்த்துச் செய்தியில், "தலைமுறைகளை கடந்து மக்களை தன்பால் ஈர்த்த படைப்புலக மேதை இளைராஜா. அவரது இசை பல்வேறு உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கக்கூடியது. எளிய பின்னணியில் இருந்து இந்த அளவுக்கு சாதனைகளை படைத்தவரின் வாழ்க்கை பயணம்  மிகவும் ஊக்கமளிக்கக்கூடியது. அவர் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது" என தெரிவித்துள்ளார். 

பி.டி. உஷா தொடர்பாக பிரதமர் மோடி குறிப்பிடும்போது, "உஷா ஜி ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகம். விளையாட்டில் அவரது சாதனைகள் பரவலாக அறியப்படுகின்றன. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக வளரும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியாக அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது" என்று மோதி கூறியுள்ளார்.

'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' படங்களுக்கு கதாசரியரும், மூத்த படைப்பாளியுமான விஜயேந்திர பிரசாத், சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் மாநிலங்களவை நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படவிருக்கின்றனர்.

ஐந்து முறை தேசிய விருது
79 வயதாகும் இளையராஜா இசைத்துறையில் வழங்கி வரும் தொடர் பங்களிப்புக்காக இதுவரை ஐந்து முறை தேசிய விருது பெற்றுள்ளார். 

சாகர சங்கமம், ருத்ர வீணா என இரு தெலுகு படத்துக்கும், சிந்து பைரவி என்ற தமிழ் படத்திற்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். பழசிராஜா மற்றும் தாரை தப்பட்டை படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதையும் இளையராஜா வென்றுள்ளார்.

2018ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.

திடீர் சர்ச்சையில் சிக்கியவர்
இரு மாதங்களுக்கு முன்னர் பாபாசாகேப் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அன்ட் மோடி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போதே இளையராஜாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது வேறு உயர் பதவி கிடைக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டது. சமூக ஊடகங்களிலும் அம்பேத்கரை மோடியுடன் இளையராஜா ஒப்பிடுவதா என்று விவாதங்கள் எழுந்தன.

இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் கோவை கொடிசியா மைதானத்தில் இசைஞானி இளையராஜாவின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் தனக்கு இசைஞானி பட்டம் சூட்டிய கலைஞரை நினைவுகூர்ந்து இளையராஜா பேசினார்.

அப்போது தற்போதைய தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்துப் பேசிய அவர், "இசைஞானி என்ற பட்டத்தை கலைஞர் கொடுத்தார் என்பதற்காக அல்ல. தனிப்பட்ட முறையில் தமிழக மக்களை முன்னேற்ற அவர் பட்ட பாடெல்லாம் அரசியல் வட்டாரத்தில் உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். பொது வாழ்வில் அவர் செய்த நல்ல காரியங்களும் தெரியும். அவர் வழியில் செல்லும் நமது முதல்வரும் நீண்ட நாள் அவரது கனவை நிறைவேற்றி வைப்பார் என நான் முழு மனதுடன் நம்புகிறேன்," என்று பேசினார்.

இது தவிர பல்வேறு தருணங்களில் மனதில் பட்டதை வெளிப்படையாகவும் சட்டென்று கோபத்துடனும் எதிர்வினையாற்றக் கூடியவராக அறியப்பட்ட இளையராஜா, ஆன்மிக கருத்துக்களை பொது நிகழ்ச்சிகளில் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது இளையராஜா நியமன உறுப்பினராகும் செய்தியை பிரதமர் மோடி  பகிர்ந்திருப்பது அவரது ரசிகர்களையும் திரைத்துறையினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் எத்தனை பேர்?
1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பின் நான்காவது அட்டவணையின்படி, மாநிலங்களவையில் 216 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும், அதில் 12 உறுப்பினர்கள் குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட வேண்டும், மீதமுள்ள 204 பேர், மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த 12 பேரை நியமன உறுப்பினர்களாக நியமிக்கும் மரபு இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இருப்பினும், தற்போதைய பலமான 245 உறுப்பினர்களில் 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள். 12 பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்.

மாநிலங்களவையை மக்களவை போல பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறி கலைத்து விட முடியாது. அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வோர் இரண்டாவது வருடமும் ஓய்வு பெறுகின்றனர். மக்களவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முழு பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். ஆனால், மாநிலங்களவையில் ஒருவர் எம்.பி பதவி ஏற்றுக் கொண்ட நாளில் இருந்து ஆறு வருடங்களுக்கு அந்தப் பதவியில் இருக்க முடியும். இடையில் மக்களவை கலைக்கப்பட்டாலும் மாநிலங்களவை அப்படியே தொடரும்.

மாநிலங்களவையில் கட்சிகளின் பலம் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு தேர்வாகும் உறுப்பினர்கள் நீங்கலாக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ குடியரசு தலைவரால் அவரது அதிகாரத்துக்கு உள்பட்டு நேரடியாக நியமிக்கப்படக் கூடிய தகுதியை 12 உறுப்பினர்கள் பெறுகின்றனர். அவர்கள் பொதுவாக இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவையில் சிறப்பு பங்களிப்பை வழங்கியவர்களாக இருப்பது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும் மரபு.

மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. எனினும், அவர்கள் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம்.

டெல்லியில் எம்.பி குடியிருப்பு வளாகத்தில் ஒரு குடியிருப்பு, பிராட்பேண்ட் வசதியுடன் கூடிய தொலைபேசி இணைப்பு, எரிவாயு இணைப்பு வசதிகள், மாத ஊதியம், அலுவலக படி, உதவியாளர் படி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் காலத்தில் வந்து போக விமானம் அல்லது ரயில் இலவச பயணச் சலுகை, இது தவிர பிற எம்.பிக்களுக்கு என்னவெல்லாம் சலுகைகள், ஊதியம் தரப்படுகிறதோ அதையே நியமன உறுப்பினர்களும் பாரபட்சமின்றி பெறுவார்கள்.

நியமன உறுப்பினர் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டு பதவியேற்ற நாளில் இருந்து ஆறு மாதங்களுக்குள் ஏதாவது கட்சியில் சேர விரும்பினால் அதற்கு வாய்ப்பு வழங்கப்படும். ஆனால், இந்த காலகட்டத்துக்குள் அவர்கள் கட்சியில் சேராமல் பின்னாளில் சேர முடிவெடுத்தால் அவர்கள் நியமன உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்.

முக்கிய மசோதாக்கள் மீதான விவாதம், கவன ஈர்ப்பு நோட்டீஸ் தருவது உட்பட எல்லா அலுவல் நடைமுறைகளிலும் நியமன உறுப்பினர்கள் பங்கேற்கலாம். ஆனால், அவர்களுக்கான வாய்ப்பு தரப்படும்வரை அவர்கள் காத்திருக்க வேண்டும்.

நியமன உறுப்பினர்கள், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் வேலைகளைச் செயல்படுத்த, நாட்டின் எந்த மாநிலத்திலிருந்தும் எந்த மாவட்டத்தையும் தேர்ந்தெடுக்கலாம். MPLADS நிதியை செயல்படுத்துவதற்கும் வெளியிடுவதற்கும் உறுப்பினர் ஒரு நோடல் மாவட்டத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.

இப்போது யாரெல்லாம் நியமன உறுப்பினர்கள்?
மாநிலங்களவையில் தற்போது நியமன உறுப்பினர்களாக ரஞ்சன் கோகாய் (உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்), மகேஷ் ஜேட்மலானி (உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தவர்), சோனல் மான்சிங் (பரதக்கலைஞர்), ராம் ஷகால் (பாஜக பிரமுகர்), ராகேஷ் சின்ஹா (ஆர்எஸ்எஸ் ஆதரவு முன்னாள் பேராசிரியர்) ஆகிய ஐந்து பேர் உள்ளனர்.

காலியாகவுள்ள ஏழு இடங்களில் தற்போது இளையராஜா, பி.டி. உஷா, வீரேந்திர ஹெகடே, விஜயேந்திர பிரசாத் ஆகியோர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டாலும் கூட மேலும் மூன்று நியமன உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாகவே இருக்கும்.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics