“எனது வீடு தீக்கிரையாகியமைக்கு நீங்கள் பதிவிட்ட ட்டுவிட்டே காரணமாகும். இதற்கான பொறுப்பை நீங்கள்தான் எடுக்க வேண்டும்”.
இவ்வாறு கடந்த திங்கட்கிழமை (11) சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை கடுமையாக சாடினார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.
இதனால் குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் சில நிமிடங்கள் கடும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றதாக அறிய முடிகிறது.
கோட்டாபய ராஜபக்ஷவினை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு கோரி பாரிய போராட்டமொன்று கடந்த சனிக்கிழமை (09) காலி முகத்திடலில் இடம்பெற்றது.
நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 100,000 க்கும் மேற்பட்ட அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
அப்போது கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருந்த கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையினை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முயன்றனர்.
எனினும், இந்த மாளிகையினைச் சுற்றி கம்பி வேலிகளினால் பலத்த தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர்ப் பிரயோகம் ஆகியவற்றினை தாண்டியும் பல மணித்தியால போரட்டத்தின் பின்னர் சுமார் நண்பகல் 12.10 மணியளவில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையினுள் நுழைந்தனர்.
எனினும், போராட்டக்காரர்கள் நுழைவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் வரை அங்கு தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, மாளிகையின் பின் வழியினால் கொழும்பு துறைமுகத்திற்குள் தப்பியோடியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்ட பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
இவ்வாறான நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவின் சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தலைமையில் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தனர்.
இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்கான அழைப்பொன்றினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன விடுத்தார்.
இதற்கமைய சனிக்கிழமை 4.00 மணிக்கு சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், அதுரலிய ரத்ன தேரர், சந்திம வீரக்கொடி போன்ற பலர் கலந்துகொண்டனர். இதற்கு மேலதிகமாக சில கட்சித் தலைவர்கள் சூம் தொழிநுட்பத்தின் ஊடாகவும் பங்கேற்றனர்.
இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையினை இருவருக்கும் சபாநாயகர் முன்வைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இந்த இராஜினாமாவை அடுத்து அரசியலமைப்பின் பிரகாரம் சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கமொன்றையும் அமைக்க கட்சித் தலைவர்கள் இக்கூட்டத்தில் இணங்கினர்.
இந்த கூட்ட முடிவுகள் தொடர்பான அறிவிப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமே முதன் முதலாக சனிக்கிழமை பி.ப 5.09 மணிக்கு தனது டுவிட்டர் ஊடாக வெளியிட்டார்.
முதலாவது டுவிட் பதிவேற்றேப்பட்ட சில நிமிடங்கள் கழித்து “திருத்தம்” எனும் தலைப்பில் பி.ப 5.27 இற்கு மற்றுமொரு டுவிட்டை அவர் பதிவேற்றிருந்தார்.
“ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கட்சித் தலைவர்கள் தீர்மானத்தில் பிரதமர் உடன்படவில்லை” என அந்த டுவிட்டில் குறிப்பிட்டிருந்தது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான மற்றுமொரு டுவிட்டை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் பதிவிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் இந்த டுவிட் சமூக ஊடகங்களில் வைரலாகியதுடன், பிரதான ஊடகங்களும் இந்த டுவிட்டுக்கு முக்கியத்துவம் வழங்கி செய்தி வெளியிட்டன.
இதனையடுத்து ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கொழும்பு - 03, கொள்ளுப்பிட்டியின் 5 ஆம் ஒழுங்கையிலுள்ள பிரதமரின் பிரத்தியேக இல்லத்தினை முற்றுகையிட தயாராகினர்.
இதனை அறிந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ரவூப் ஹக்கீமின் டுவிட்டுக்கான மறுப்பறிக்கையொன்றினை தனது ஊடகப் பிரிவின் ஊடாக வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் “பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வ கட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறுகிறார்.
குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை அவர் ஏற்றுக்கொள்கிறார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் குறித்த ஊடக அறிக்கையினையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தினை முற்றுகையிட்டனர். இதன்போது ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் போது பாதுகாப்பு படையினர் சில ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
இத்தாக்குதல் சம்பவங்கள் நியூஸ் பெஸ்ட் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்தனர்.
ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோரின் மறைவிற்கு பின்னர் கொழும்பு றோயல் கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டவுள்ள பல கோடி பெறுமதியான இந்த வீடு சில நிமிடங்களில் தீக்கிரையாகியது.
இந்த வீட்டில் நோய் வாய்ப்பட்ட நிலையில் தங்கியிருந்த பிரதமரின் பாரியரான களனி பல்கலைக்கழக போராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதுடன் இங்கிருந்த பெறுமதியான புத்தகங்களில் ஒரு தொகுதியும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் குறித்த எரிப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பின்னணியில் கடந்த திங்கட்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது வீடு தீக்கிரையாக்கப்பட்டமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமை திட்டித் தீர்த்துள்ளார்.
“கடந்த சனிக்கிழமை (09) நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பதவி விலகமாட்டேன் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. புதிய ஆட்சி அமையும் போது பதவியிலிருந்து செல்வேன் என்றுதான் கூறினேன். ஆனால், நீங்கள் இட்ட டுவிட்டால் எனது வீடு தீக்கிரையாகும் நிலை ஏற்பட்டது. அதற்கு நீங்கள் தான் காரணம்” என்று ஹக்கீமை நோக்கி கடுந்தொனியில் சாடியுள்ளார் ரணில்.
இதற்கு ரவூப் ஹக்கீம் அளித்த பதிலை ரணில் ஏற்கவில்லை. நான் பதவி விலகமாட்டேன் என்று நீங்கள் கூறிய பொய்யால் ஆத்திரமுற்றோர் எனது வீட்டினை தீக்கிரையாக்கினர் என்று ரணில் விக்ரமசிங்க ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தின் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையிலும் தனது வீடு தீக்கிரையாக்குவதற்கு ரவூப் ஹக்கீமே பொறுப்பு என அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ரணில் விக்ரமசிங்கவும் ரவூப் ஹக்கீமும் மிகவும் நெருங்கிச் செயற்பட்டனர். எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிக்கத் தொடங்கியதை அடுத்தே இவர்கள் இருவருக்கும் இடையில் பாரிய விரிசல் ஏற்பட்டது.
இவ்வாறு ரவூப் ஹக்கீம் மீது ரணில் விக்ரமசிங்க முன்வைக்கும் குற்றச்சாட்டின் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் மீது மீண்டும் இனவாதம் தலைதூக்குவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரை ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக எந்த பதிலையும் முன்வைக்கவில்லை.
இது தொடர்பில் இந்த கட்டுரைக்கு சில கருத்துக்களை பெறுவதற்காக ரவூப் ஹக்கீமை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks