பாராளுமன்றத்திற்கு வருகை தரும் எம்.பிக்களுக்கு தாம் வசிக்கும் பிரதேசங்களிலேயே இராணுவ முகாம்கள் மூலம் எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான முறையான திட்டம் எதுவும் கிடையாதென பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முன்வைத்துள்ள முறைப்பாட்டுக்கிணங்க, அவர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொடுப்பதற்கு வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை, புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நடைபெறும் தினத்தில் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் அதற்கான பணிப்புரைகளை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கும் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாக்களிப்பதற்காக வருகை தரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அச்சுறுத்தல்களை விடுத்து வரும் நிலையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் பிரதான வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையாக மூடப்படுவதுடன், அப்பகுதியில் குடியிருப்போர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.
அத்துடன் பாராளுமன்ற வீதிகளிலும் அதனையண்டிய பிரதேசங்களிலும் பாதுகாப்பு கடமைகளில் இராணுவத்தினரின் கவச வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அதிதிகள் வருவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் பார்வையாளர்களுக்கான கலரியும் மூடப்பட்டுள்ளது.
அதேவேளை பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஊடகவியலாளர்களுக்கு புதிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக படைக்கலசேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks