எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நீண்ட நாட்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாடசாலை நாட்கள் மூன்றாக வரையறுக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு நாட்கள் இணையவழி மூலம் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
அதன்படி, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது மாணவர்கள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலை சென்று கல்வி பயிலவும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையவழி மூலம் கற்றல் முறைகளை கடைபிடிக்கவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இதனை கருத்தில் கொண்டு முதலாம் தவணைப் பரீட்சையை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைப் பாடசாலை நாட்கள் செப்டம்பர் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைப் பாடசாலை நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் முதலாம் தரம் தொடக்கம் க.பொ.த. சாதாரண தர வகுப்பு வரை திருத்தப்பட்ட பாடத்திட்டத்திற்கு அமைவாக கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து பாடசாலை அதிபர்களுக்கு மற்றும் மேலதிக மாகாணக் கல்வி செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் உதவிக் கல்வி பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக அவ்வறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தென் மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை 5 நாட்களுக்கும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் நேற்று (24) நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் போக்குவரத்து பிரச்சினையால், அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருக்கு பாடசாலைக்கு வருகை தர முடியாவிடின் அது குறித்து முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்கள் மற்றும் வேன்களுக்கு தேவையான எரிபொருளை நாடு தழுவிய ரீதியில் உள்ள டிப்போக்கள் ஊடாகவும் விநியோகிக்கப்படுவதாக போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கல்வி அமைச்சு முன்வைத்த கோரிக்கை அமைவாகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இருப்பினும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என்று எரிபொருள் விலை குறைந்துள்ளதால் பாடசாலை போக்குவரத்து கட்டணங்களை எம்மால் குறைக்க முடியாது எனவும் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களின் சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விலைகள் சொற்ப விலைகளினால் குறைக்கப்பட்டு இருந்தாலும் வாகனங்களுக்கான ஏனைய செலவுகள் 300 வீதம் அதிகரித்துள்ளது.
தற்போது வாரத்திற்கு மூன்று நாட்களும் மாதத்திற்கு 12 நாட்கள் மாத்திரமே பாடசாலை நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்இ இத்தீர்மானத்தினால் பாடசாலை போக்குவரத்து கட்டணம் தொடர்பில் பிரச்சினை எழுகிறது. இருப்பினும் குறித்த 12 நாட்களுக்கு மாத்திரம் குறித்த ஒரு தொகையை பெற்றோர்களிடம் குறைத்து அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks