பாடசாலை மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு பிரத்தியேக பேரூந்து சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் 40 பேரூந்துகள் சேவையில் ஈடப்படுத்தப்படும். ஆசிரியர்கள், மாணவர்கள் மாத்திரமே இந்த பேரூந்துகளில் பயணிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் நிலான் மிருன்டப தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் 29 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு தேசிய போக்குவரத்து சபை 'மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை' முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
மேல் மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் போக்குவரத்து அமைச்சுடன் ஒன்றினைந்து இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படும். பொது பாடசாலை சேவையாக இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்படும். மாணவர்களிடமிருந்து சாதாரண பேருந்து கட்டணம் அறவிடப்படும்.
மேல் மாகாணத்தில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் இந்த செயற்திட்டத்தின் கீழ் 40 பேரூந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படும்.
விசேடமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள பிரதான பாடசாலைகள், கம்பஹா, களுத்துறை, ஹொரன, ஹோமாகம மற்றும் மஹகரம ஆகிய பகுதியிகளில் உள்ள பிரதான பாடசாலைகள் மற்றும் அதனை அண்மித்த பாடசாலை மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படும்.
இந்த பேரூந்துகளை அடையாளப்படுத்தும் வகையில் 'பொது பாடசாலை சேவை' என்ற இலட்சினை பேரூந்துகளில் ஒட்டப்படும். அத்துடன் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். தேசிய போக்குவரத்து சபையில் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்திற்குள் பிரவேசித்து தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த பேருந்துகள் காலை 07.30 மணிக்கு குறித்த பாடசாலை நோக்கி பயணம் செய்யும், பாடசாலை முடிவடைந்ததன் பிறகு மீண்டும் சேவையில் ஈடுபடும். இந்த பேரூந்துகள் முழுமையாக கண்காணிக்கப்படும். பாடசாலைகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாத்திரமே இச்சேவையை பயன்படுத்த முடியும் என்றார்.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks