இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதுக்கு எதிராக வவுனியாவில் ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
04 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் பெரும்பாலான பாடசாலைகளில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது, ஜனநாயக ரீதியாக உரிமைக்காக போராடிய எமது பொது செயலாளர் முறையற்ற விதத்திலே கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றோம்.
அத்துடன் இந்த அரசு அவசரகால சட்டத்தினை உடனடியாக நீக்கி நாட்டில் ஜனநாயக தன்மையை உறுதி செய்ய வேண்டும். தேவையற்ற கைதுகளை தவிர்க்க வேண்டும். எமது பொதுச் செயலாளர் உடனடியாக விடுவிக்கப்படாவிடில் நாம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை கூறிக் கொள்கின்றோம் என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் வவுனியா வெளிக்குளம் மகா வித்தியாலம், இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம், சைவப்பிரகாசா மகளீர் பாடசாலை, முஸ்லீம் மகா வித்தியாலயம், தமிழ் மத்திய மகா வித்தியாலயம் உட்பட பெரும்பாலான பாடசாலைகளில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றது.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks