சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று வெள்ளிக்கிழமை (5) மாலை விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்தை அவதானித்ததன் பின்னரே சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் 10 சுயாதீன கட்சிகளும் ஒருமித்த தீர்மானத்தை முன்னெடுக்கும் என இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவின் கொள்கை பிரகடன உரையில் பல விடயங்கள் யதார்த்தமானதாக காணப்பட்டாலும், ஒரு சில விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும். உரையில் காணப்பட்ட குறைப்பாடுகளை உரை மீதான விவாதத்தின் போது சுட்டிக்காட்டுவோம்.
தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சர்வ கட்சி அரசாங்கத்தில் ஒன்றினையுமாறும், அதற்கான பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
ஒருசிலரது தவறான செயற்பாடுகளினால் நாட்டு மக்கள் முழு அரசியல் கட்டமைப்பையும் வெறுக்கிறார்கள். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசியல் ஸ்தீரத்தன்மை பேணப்பட வேண்டுமாயின் நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும்.
நாட்டில் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் தேர்தல் ஒன்றை நடத்துவது சாத்தியமற்றது. ஆகவே சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதை தொடர்ந்து தேர்தலை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
சர்வ கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கை 30ஆக வரையறுக்கப்பட வேண்டும். அத்துடன் அரச நிர்வாகத்தை கண்காணிப்பதற்கு நிறைவேற்று தேசிய சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.
தேசிய அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியின் கொள்கை எத்தன்மையானது என்பதை தெரிந்து கொண்டதை தொடர்ந்து சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் 10 அரசியல் கட்சிகளும் ஒருமித்து தீர்மானத்தை அறிவிப்போம். அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றார்.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks