தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக நாட்டில் நிலவும் மோசமான காலநிலை 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து படிப்படியாகக் குறைந்து பத்தாம் திகதிக்குப் பின்னர் முழுமையாக சீராகும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சுகத் திஸாநாயக்க தெரிவிக்கையில், கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களிலுள்ள 65 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 3471 குடும்பங்களைச் சேர்ந்த 13739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால் இதுவரையில் ஐந்து உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 10 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான உலர் உணவு உள்ளிட்ட வசதிகள் பிரதேச செயலகங்கள் ஊடாகவும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முப்படையினர், பொலிஸ் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன இதற்கு ஒத்துழைப்புக்கள் வழங்கியுள்ளன.
இதுவரையில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 1149 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மண் சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை மற்றும் இரண்டாம் நிலை அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அம்பாந்தோட்டை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதன்போது கருத்து வெளியிட்ட தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஆசிரி கருணாவர்தன, 'சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும். சுவர்களின் வெடிப்புக்கள் உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.' என்று குறிப்பிட்டார்.
களு, நில்வளா, களனி ஆகிய கங்கைகளிலும் , மகாவலி கங்கையிலும் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் , அவற்றை அண்மித்த பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் ஷஷிக இரேஷ் தெரிவித்தார்.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks