இலங்கையின் துறைமுகமொன்றிற்குள் யுவான் வாங்-5 கப்பல் பிரவேசிப்பதையிட்டு கவலை வெளியிட்டு வரும் ஊடக அறிக்கைகளை நாங்கள் அவதானித்து வருகின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர்க் கப்பல்கள், இராணுவம் அல்லது கடற்படை கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதிக்கப்படுவது தொடர்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடானது தேசிய இறையாண்மை, சர்வதேச சமாதானம், பாதுகாப்பு மற்றும் அணிசேராக் கொள்கை ஆகிய பரந்துபட்ட கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாகக் காண வேண்டும் என தொடர்ந்தும் வாதிட்டு வருகிறது. பனிப்போர் மூண்ட காலப்பகுதியில் இலங்கையால் முன்வைக்கப்பட்ட இந்தத் தொலை நோக்குச் சிந்தனை, எங்களின் பார்வையில் முன்னரை விட தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமானது.
இந்து மகா சமுத்திரத்தை எல்லாக் காலங்களிலும் பாதுகாப்பானதாக வைத்திருப்பதற்கான அனைத்து நடைமுறைகள் மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்வதற்காக, பரந்த அந்த பெருங்கடல் பிராந்தியத்தின் அனைத்து முற்போக்கான பிரிவினர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எண்ணியுள்ளோம்.
மேலும் அமைதியான வழிநடத்தலுடன் கூடியதான பொருளாதார நடவடிக்கைகள் கடற்கரையோர மாநிலங்களுக்கு நன்மை பயப்பதாக அமைவதோடு, அனைத்து பிரதேசங்களின் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கும் பங்களிப்புச் செய்யும்.
அந்த அடிப்படையில், இலங்கை மற்றும் அயல் நாடுகளின் பங்காளிகள் இந்தியப் பெருங்கடல் மீதான அத்தகைய பரந்துபட்ட நல்ல நோக்கைப் பேணிக் கொள்வதற்கு நாங்கள் ஊக்கமளிப்போம். மாறாக போர்க் கப்பல்கள் அல்லது கடற்படைக் கப்பல்கள் எமது கடல் பிராந்தியத்தைக் கடந்து செல்ல அனுமதிப்பதன் மூலம், அந்த சிறந்த நோக்கம் பெரிதும் பாதிப்படையவே செய்யும்.
இந்த நிலையில், இலங்கையின் எல்லைக்கு அப்பாலும், அதனைச் சூழவுள்ள கடல் எல்லைக்குள்ளும் இந்தியத் துணைக் கண்டத்தினதும் பாதுகாப்பிற்குப் குந்தகமான எந்தவிதமான நடவடிக்கைகளும் அனுமதிக்கப்பட மாட்டாது என இலங்கை அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக உறுதிப்படுத்தி வந்ததுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே, இத்தகைய உன்னத நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அவசியமான அர்த்தமுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks