எதிர்காலத்தில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தை சர்வ கட்சி அரசாங்கம் என்று பெயரிடுவதற்கு உடன்படவில்லை என்றால், சர்வ கட்சி ஆட்சி என்று பெயரிட தான் முன்மொழிவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் (சமகி ஜன சந்தானய) இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது, “சர்வ கட்சி அரசாங்கத்தில் இணையுமாறு அனைத்து கட்சிகளையும் நாங்கள் அழைத்துள்ளோம். அதற்காக அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
நாட்டின் பொருளாதாரம் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. இந்த நிலையில் இருந்து மீள அனைவரும் இணைந்து அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை ஏற்று சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்கி இந்த நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு (சமகி ஜன சந்தானய) சர்வ கட்சி அரசாங்கத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்ற வருமாறு அழைக்கிறேன். இவர்கள் அனைவரும் என்னுடன் பணியாற்றியவர்கள். எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் ஒன்றாக வேலை செய்ய முடியும்.
1941 ஆம் ஆண்டு, பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்துக் கொண்டு அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டது. முழு பாராளுமன்றமும் அரசாங்கமாக ஆக்கப்பட்டது. அதே மரபை நாமும் செயல்படுத்தலாம்.
1977 ஆட்சி மாற்றத்தில் 5/6 அதிகாரம் பெற்று அரசாங்கம் அமைக்கப்பட்டு நாடு கட்டியெழுப்பப்பட்டது. ஆனால் இப்போது 5/6 அதிகாரத்தாலும் சர்வ கட்சி அரசாங்கம் இல்லாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. ஒரே வழி சர்வ கட்சி ஆட்சி மாத்திரமே ஆகும்.
சமீபத்திய வன்முறைச் செயல்கள் காரணமாக, நாங்கள் அவசரகால உத்தரவை விதிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவசரகால உத்தரவை தொடர்வதற்கு நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், எதிர்கால பொருளாதார வேலைத்திட்டத்தின்போது சில சட்டங்கள் விதிக்கப்பட வேண்டும். அதற்கு அவசரகால சட்டம் தேவை என்றார்.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks